மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வது எமக்கு சவாலான ஒரு விடயமாக மாறியுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. எரிபொருள் சுத்திகரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதனை விற்பனை செய்யவும் எதிர்பார்க்கவில்லை. எரிபொருள் சுத்திகரிப்பை அதிகரிக்க வேண்டுமாயின் அதனை செய்ய வேண்டும். புதிய சுத்திகரிப்பு நிலையத்தை கூட நிர்மாணிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கியை மையப்படுத்தி, புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கினால், நாட்டின் தேவைக்கு மாத்திரமல்லாமல், ஏற்றுமதி சந்தைக்கும் எம்மால் செல்ல முடியும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும்.
மின் உற்பத்தி செய்வதற்கு புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டும் .டீசலுக்கோ உலை எண்ணெய்க்கோ செல்லக் கூடாது.
அதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிரதமரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுத்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி செய்யும் செயன்முறையில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
எமது செயற்குழுவிற்கு நீங்களும் வாருங்கள்.
எரிபொருள் இறக்குமதி செய்யும் செயன்முறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பாருங்கள். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா 02, 03 பில்லியன் டொலர்களை கொண்டுவர முடியும் என குறிப்பிட்டார்.
இந்த நாட்டு மக்கள் மிகவும் துயரமான நிலையில் வீதிகளில் இருக்கின்றனர். எரிபொருளை பெற முடியாமல், சமையல் எரிவாயுவை பெற முடியாமல் உள்ளனர்.
ஜுலை மாதம் எண்ணெய் இறக்குமதி செய்தால், ஆகஸ்ட் மாதம் எண்ணெய்யை கொண்டுவருவது சவாலாக இருக்கும். இம்மாதம் எமக்கும் 500 மில்லியன் டொலர் எரிபொருளுக்கென தேவையாக உள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கும் அதாவது 10 நாட்களுக்கு 319 மில்லியன் டொலர்கள் தேவை. மத்திய வங்கியிடம் 125 மில்லியன் டொலரே உள்ளது.
இதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடினோம். இதற்கு தனியார் வங்கியிடமும் ஏற்றுமதி தரப்பினரிடம் உதவியை கோரியுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு
மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆராய்ந்து வருகின்றது.
அதன்படி தற்போது ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ.87.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கு 283.00 ரூபா வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.