புதுச்சேரி: மதிய உணவு தொடர்பான புகார் பற்றி முதல்வர், கல்வியமைச்சரிடம் தெரிவிப்பதுடன், ஆளுநராக நானும் முடிவு எடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த அறக்கட்டளையானது மதிய உணவை 12 மாநிலங்களில் செயல்படுத்துகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர்.
இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையங்கூடம் அட்சய பாத்ரா அமைப்பிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகே சமையல் பணிகள் தொடங்கின. லாஸ்பேட்டை சமையல் கூடத்தை நன்கொடை மூலம் பல கோடி மதிப்பில் அட்சய பாத்திரா அமைப்பினர் நவீனப்படுத்தினர். தனி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் மதிய உணவை வழங்கத்தொடங்கினர்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவினை அட்சய பாத்திரா திட்டத்தின் மூலம் புதுவை அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தயிர், தக்காளி, சாம்பார் சாதம் என்ற ஆடிப்படையில் மதியம் சைவ உணவினை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவுக் கூடத்திலிருந்து மதிய உணவு தயார் செய்து அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி பெயரளவில் வழங்கப்படுவதாக பொது நல அமைப்பினர், சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். பள்ளிக் குழந்தைகளிடமும் கருத்துகள் பெறப்பட்டன. முதல்வர் ரங்கசாமி உணவு மாதிரியை கடந்த வாரம் சாப்பிட்டு பார்த்தார்.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை பள்ளிகளில் ஆய்வு செய்தார். கோரிமேடு இந்திரா நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களோடு மதிய உணவு சாப்பிட்டு பார்த்தார். இது குறித்து ஆளுநர் தமிழிசை கூறியது: “மதிய உணவு பற்றி ஆய்வு செய்யவே நேரில் சாப்பிடச் சென்றேன். புகார்கள் விசாரிக்கப்படும். குழந்தைகள் சொல்வதை கேட்பேன். அதை முதல்வர், கல்வியமைச்சரிடம் தெரிவிப்பேன். நானும் இதில் முடிவு எடுப்பேன்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறினார்.