மும்பை: மஹாராஷ்டிராவில் பல மாநிலங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தேரி, செம்பூர், பன்வல் மற்றும் சியோன் உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மிதப்பதையும், அதிலும் பொது மக்கள் நடந்து சென்று வரும் படங்கள் வெளியாகி வருகின்றன. பல இடங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில பஸ்கள் மாற்றி விடப்பட்டன. புறநகர் ரயில் சேவை மட்டும் மும்பையில் வழக்கம் போல் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மும்பையில், இன்று(ஜூலை 5) காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 95.81 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே காலகட்டத்தில், மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 115.09 மி.மீ., மற்றும் 116.73 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை
அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களின் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தானே, பஹல்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க், புனே, பீட், லடூர், ஜல்னா, பர்பானி மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில், சிப்லன் என்ற இடத்திலும் கட்கோபர் புறநகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வீடுகள் சேதமடைந்தன. மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
முதல்வர் ஆலோசனை
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடனும் நேரடியாக தொடர்பில் உள்ளார். முக்கியமாக மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்காட், ரத்னகிரி, தானே, பல்ஹர், சிந்தூர்க், கோல்ஹாப்பூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம், அணை நீர் மட்டம் அபாய அளவில் உயர்வது குறித்து பொது மக்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மும்பையில் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் கூறியுள்ளார்.
அபாய நிலைகளில் ஆறுகள்
கனமழை காரணமாக குண்டலிகா நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து கொண்டுள்ளது. அம்பா, சாவித்ரி, பதல்கங்கா, உல்ஹாஸ் மற்றும் கர்ஹி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.