படங்கள் வெற்றியோ, தோல்வியோ பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸின் ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்து ‘சாணிகாயிதம்’ அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’, தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் ‘வாத்தி’, சத்யஜோதி ஃபிலிம்ஸுக்காக மேலும் ஒரு படம் எனக் கைவசம் நிறையப் படங்களை வைத்திருக்கிறார்.
இதனிடையே தற்போது மீண்டும் படங்கள் தயாரிப்பில் இறங்கவிருக்கிறார். அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பாக ‘மாரி 2’ வெளியானது. அதற்கு முன் ‘பவர்பாண்டி’, ‘விஐபி’, ”தங்கமகன்’, ‘காலா’, ‘வடசென்னை’, ‘அம்மா கணக்கு’, ‘நானும் ரவுடிதான்’ உட்படப் பல படங்களைத் தனது வுண்டர்பார் மூலம் தயாரித்திருந்தார் தனுஷ்.
வுண்டர்பார் ஆரம்பித்ததன் நோக்கம் பற்றி ஒருமுறை மனம் திறந்திருந்தார் தனுஷ்.
“என் அண்ணன் செல்வா பட வாய்ப்புக்காக நிறைய ஹீரோக்களிடம் கதை சொல்லி, நிறையத் தயாரிப்பு நிறுவனங்களின் படிகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள் என்னிடம் வருத்தப்பட்டு, ‘ஒருவேளை சினிமாவில் நான் ஜெயிச்சா நல்ல திறமைகளுக்கு வழியமைத்துக் கொடுக்கணும். ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கணும்’ன்னு சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் வுண்டர்பார்.”
ஆரம்பத்தில் அடுத்தடுத்து படங்கள் தயாரித்து வந்தவர், ‘மாரி 2’-விற்கு பின்னர் ஒரு சில காரணங்களால் தயாரிப்பு பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் பலரும் அவரிடம் ‘அடுத்த தயாரிப்பு எப்போது?’ எனக் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு விடையாகத்தான் வந்திருக்கிறது இந்தச் செய்தி.
‘பவர் பாண்டி’ போல தனுஷின் இயக்கத்திலேயே ஒரு படம், அடுத்து ‘பியார் பிரேமா காதல்’ இளன் இயக்கத்தில் தனுஷே நடிக்கும் படம் தவிர, வெற்றிமாறனுடன் டைஅப் வைத்து ஒரு படம் என வரிசையாகத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார் தனுஷ்.