முசிறி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்திச் சென்று பீரோவில் வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முசிறி அருகே தா.பேட்டையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது உறவினரை பார்க்க வளையெடுப்பு கிராமத்திற்கு முத்துசாமி மொபட்டில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மொபட்டில் தா.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர், முத்துசாமியை தடுத்து நிறுத்தி அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த வீட்டு சாவியை பறித்துச் சென்று, முத்துசாமியின் வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் பணம், 6 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என முத்துசாமியை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்துசாமி சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM