ராகுல் குறித்து தவறான செய்தி பரப்பிய டிவி நெறியாளர் – சத்தீஸ்கர், உ.பி. மாநில போலீஸ் மோதல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாக சித்தரித்து ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நெறியாளரை கைதுசெய்ய சென்போது சத்தீஸ்கர் காவல்துறையினருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில், கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தவறு செய்தவர்கள் தெரியாமல் செய்திருப்பார்கள். அதில் சில சிறுவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள்” என அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.
image
ஆனால் அதனை தவறாக சித்தரித்த பிரபல வட இந்திய தொலைக்காட்சி ஒன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபூர் சர்மாவிற்கு ஆதராவாக பேசியதற்காக, டெய்லர் கன்னையா லால் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி, கொலை செய்தவர்கள் சிறுவர்கள், எனவே அவர்களை மன்னித்து விட வேண்டும் என ராகுல்காந்தி பேசியதாக ஒளிப்பரப்பினர். இந்த வீடியோவினை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
image
இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்ற ஆணையுடன் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவரை கைது செய்ய, அவரது வீட்டிற்கு சத்தீஸ்கர் காவல்துறையினர் சென்றுள்ளனர். ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நெறியாளரை கைது செய்ய விடாமல் தடுப்பதோடு அவரை அறிவிக்கப்படாத இடத்திற்கும் அழைத்துச் சென்றதாக புகார்கள் எழுந்துள்ளது. ஒரு கைது விவகாரத்தில் இரண்டு மாநில காவல்துறையினருக்கு இடையே மோதல் போக்கு உருவாகியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– நிரஞ்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.