பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட முற்றிலும் இரும்பினாலான இந்த கோபுரம் 1,063 அடி உயரம் கொண்டதாகும். உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்றாக இந்த ஈபிள் கோபுரம் விளங்குகிறது.
இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பழுதுபார்ப்புக்கு பதிலாக ஈபிள் கோபுரம் வெறுமென வர்ணம் பூசப்படுவதாகவும் நிபுணர்கள் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியையொட்டி 60 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.489 கோடி) செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாகவும், ஈபிள் கோபுரத்தில் இப்படி மீண்டும் வர்ணம் பூசப்படுவது இது 20-வது முறை என்றும் நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஈபிள் கோபுரத்தை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் இது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.