திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதன்முறையாக ஒரேநாளில் ரூ. 6.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. வழக்கமாக ஜூன் 2வது வாரத்திலேயே பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். ஆனால் இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் தொடங்கியும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கியூ காம்பளக்ஸ்கள் நிரம்பி சுமார் 3 கிமீ தூரம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதும் தொடர்கிறது. இதேபோல் நேற்று ஒரேநாளில் 77,907 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், ரூ. 300 கட்டணம் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசித்தனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ. 6.18 கோடி காணிக்கை கிடைத்தது. இது தேவஸ்தான வரலாற்றில் முதன்முறை ஆகும். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ரூ. 5.73 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. இதுவே அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகபட்ச காணிக்கை கிடைத்துள்ளது. வழக்கமாக பிரம்மோற்சவ நாட்களில் மட்டும்தான் அதிகபட்ச காணிக்கை கிடைக்கும். ஆனால் கடந்த முறையும் (1-4-2012), இம்முறையும் சாதாரண நாளில் அதிகபட்ச காணிக்கை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது