இயற்கையான முறையில் விளைவித்த உணவுகளை உண்ணும் போது தான், மக்களின் ஆரோக்கியம் பெருகும். காலப்போக்கில் இன்ஸ்டன்ட் முறையில் மக்களின் வாழ்க்கையும், உணவு முறையும் மாறியதால், உணவு பொருட்களை பயிரிடுவதும், உற்பத்தி செய்வதும் என எல்லாம் வேகமாக மாறியது. பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து கோவில்கள் வரை வழங்கப்படும் உணவின் தரம் சரியாக உள்ளதா எனக் கண்டறிய முடிவதில்லை.
ஆனால் திருப்பதி திருமலை கோவிலில் மக்களுக்கு வழங்கப்படும் உணவானது இயற்கையான முறையில் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து 12 வகையான உணவுப் பொருட்களை வாங்க முடிவு செய்துள்ளது.
மாநில விவசாயிகள் ஆணையம் மற்றும் மார்க்ஃபெட் அதிகாரிகள் திருப்பதி தேவஸ்தானத்தில் கலந்தாய்வு செய்தனர். அந்த கலந்தாய்வில், மக்களுக்கு பிரசாதம் செய்து வழங்க பயன்படுத்தப்படும் 12 வகையான உணவுப் பொருட்களை தவணை முறையில் பல முறை வாங்கி கொள்வதற்கான ஒப்பந்தமானது, ஆந்திர மாநில உழவர் அமைப்பு மற்றும் மார்க்ஃபெட் நிறுவனத்துடனும் முடிவானது.
இந்த ஒப்பந்தம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவிக்கையில், “மக்களுக்கு பிரசாதம் செய்து வழங்கப் பயன்படுத்தப்படும் 12 வகையான உணவுப் பொருட்களை எந்த ஒரு இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில், மாநில உழவர் அதிகார அமைப்புடன் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. பிறகு 500 மெட்ரிக் டன் கடலை முதல் தவணையாக கொள்முதலானது. அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின், இப்போது மூன்றாம் தவணையாக நிலக்கடலை, துவரம் பருப்பு, அரிசி, வெல்லம், உளுந்து, நிலக்கடலை, கொத்தமல்லி, தனியா, புளி, பாசிப்பயறு, மிளகு, மஞ்சள் போன்றவை வாங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரசாயனமில்லாத பிரசாதங்கள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.