பெங்களூரு: இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதனால் சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரின் வீடுகள், விடுதிகள் ஆகியவற்றில் வரும் ஆகஸ்ட் 11 முதல் 17-ம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு வாரத்துக்கு தேசியக்கொடியை ஏற்றி அதன் பெருமையை மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி நிர்வாகங்கள் தங்கள் வாகனங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
இது தொடர்பாக மாணவர்கள், ஊழியர்களுக்கு வழங்கும் அறிவுரைகள், சுதந்திர தின பவள விழா ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் இணையதளத்தில் வாரந்தோறும் பதிவேற்ற வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.