வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை ஓ பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்,
“அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் நேற்று மாலை தான் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஆனால் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு 15 நாட்களுக்கு முன்பாகவே உறுப்பினர்களின் கைகளில் கிடைத்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி. எனவே இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று, ஓபிஎஸ் தரப்பு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பில் மேலும் ஒரு மனுவினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இன்று காலை முதல் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அந்த மனுவில்,
“அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் போது, பொதுச் செயலாளர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட அந்த இருவரின் ஒப்புதல் பெறாமல், தலைமை கழக நிர்வாகிகள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பை செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டுவதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
அதிமுகவில் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால், கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. தலைமை கழகத்திற்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே தலைமை கழகம் வெளியிட்ட அந்த அறிவிப்பை தடை செய்து, வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இந்த மனுவை இன்று மாலை அல்லது நாளை காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவே கூடாது என்று, அடுத்தடுத்த அதிரடி திட்டத்தை வகுத்து களமிறங்கி இருக்கும் ஓபிஎஸ் தரப்பால், பெரும் சிக்கலில் சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி சிக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அத்தனை சிக்கலையும் முறியடித்து அரியணை ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.