ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அடுத்த சில மாதங்களுக்கு எதிர்ப்பாற்றல் இருக்கும் என்று இத்தனை நாள்களாகச் சொல்லப்பட்டது. இப்போது அப்படியெல்லாம் இல்லை, கொரோனா பாதித்தோருக்கு எதிர்ப்பாற்றல் இருக்காது என்று அறிவித்திருக்கிறது சுகாதாரத்துறை.
பூஸ்டர் போடப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு எதிர்ப்பாற்றல் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும்? இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அனேகமாக இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கக்கூடும். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் மற்றும் இந்தியாவுக்குள்ளேயே பயணம் செய்வோர்தான் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தாருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், சிலர் பூஸ்டர் டோஸும் போட்டுக் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அதன் மூலம், தடுப்பூசியானது புதிதாகப் பரவும் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கவில்லை என்பது விளங்குகிறது.
எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் தொற்று பாதிக்கலாம் என்பதால் அவர்களும் கவனமாக எப்போதும் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டோருக்கும், பூஸ்டர் போட்டுக் கொண்டோருக்கும் தொற்று பாதித்தாலும் அது தீவிரமாவதில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி என எல்லா அறிகுறிகளுமே மிதமாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
50 வயதுக்கு மேலானவர்களுக்கும், இணைநோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதித்தால் வாய்வழியே எடுத்துக் கொள்ளக்கூடிய 5 நாள்களுக்கான மாத்திரைகள் தற்போது வழங்கப்படுகின்றன.
இந்த மருந்துகளின் மூலம் சீக்கிரமே குணமடைந்து விடுகிறார்கள். மற்றபடி 50 வயதுக்குக் கீழானவர்கள், இணை நோய்கள் இல்லை என்றால் அவர்களுக்கு சப்போர்ட்டிவ் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதிலேயே குணமாகிறார்கள்.
இந்த நான்காவது அலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பலரும் ஏற்கெனவே ஒருமுறையோ, இருமுறையோ, மூன்றுமுறையோகூட தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதைவைத்துப் பார்க்கும்போது, ஏற்கெனவே வந்த கொரோனா தொற்று, அடுத்தமுறை அந்தத் தொற்று வராமல் காக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பது புரிகிறது.
எனவே, ஒருமுறை கொரோனா தொற்று வந்தாலும் அது மீண்டும் மீண்டும் வரலாம். அப்படி மறுபடி தொற்று பாதிக்கும்போது அது உடலை பலவீனமாக்குகிறது.
அதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பாற்றல் குறையலாம். நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தூக்கமின்மை, இருமல், பசியின்மை, உடல் களைப்பு போன்ற அறிகுறிகள் தொடரலாம். இவை `லாங் கோவிட்’ அறிகுறிகள் எனப்படும். எனவே, ஒவ்வொரு முறை கொரோனா தொற்று ஏற்படும்போதும் தொடர்ச்சியாக லாங் கோவிட் அறிகுறிகளும் தொடரலாம்.
இது தவிர ‘போஸ்ட் கோவிட்’ என்றொரு நிலை உண்டு. ஒருமுறை கோவிட் வந்து, அது மிதமாகவோ, தீவிரமாகவோ தாக்கி, குணமானவர்களுக்கு வைரஸ் கிருமியானது உடலில் சைட்டோகைன்ஸ் எனும் புரதங்களைத் தூண்டிவிடும். அதன் விளைவாக உடலுறுப்புகள் பாதிக்கப்படலாம்.
60 வயதுக்கு மேலானவர்களுக்கும், இணைநோய்கள் உள்ளவர்களுக்கும் இது பாதிக்கலாம். போஸ்ட் கோவிட் பாதிப்பு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் மீண்டும் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாவது சரியானதல்ல என அறிவுறுத்தப்படுகிறது. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், எல்லோரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளத் தகுதியானவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாவது பூஸ்டரும் போடத் தொடங்கிவிட்டார்கள்.
நம் நாட்டிலும் அதற்கான பரிந்துரை விரைவில் வரலாம். அதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான் ஒரே வழி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.