Kaali போஸ்டர் சர்ச்சை: கனடாவிலும் வலுக்கும் எதிர்ப்பு; இயக்குநர் லீனா மணிமேகலையின் பதில் என்ன?

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் லீனா மணிமேகலை. ‘செங்கடல்’, ‘மாடத்தி’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். இவர் தற்போது கனடாவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி (மாஸ்டர்ஸ் டிகிரி) படித்து வருகிறார்.

இதனிடையே கனடாவிலுள்ள டொரோன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு பயிற்சி முகாமில், இவரது பங்களிப்பாக எடுக்கப்பட்ட ஆவணப்படம்தான் ‘காளி’. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்துக் கடவுளான காளி போன்று வேடமணிந்துள்ள பெண்ணின் கைகளில், சிகரெட் மற்றும் LGBTQ-யின் கொடி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டர் இந்துக் கடவுளை அவமதிப்பதாக உள்ளது என்றும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலையைக் கைது செய்யவேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

High Commission of India Press Release

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த லீனா மணிமேகலை, “டொரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். இந்தப் படத்தைப் பார்த்தால் ‘#ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேகைப் பதிவிடாமல் ‘#LoveYouLeenaManimekalai’ என்று பதிவிடுவார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கனடாவின் ஒட்டாவா நகரில் செயல்படும் இந்திய உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கனடாவின் டொரோண்டோவில் உள்ள ‘Aga Khan Museum’ அருங்காட்சியகத்தில் ‘அண்டர் தி டென்ட்’ திட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்ட படத்தின் போஸ்டரில் இந்துக் கடவுள்கள் அவமரியாதையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கனடாவில் வசிக்கும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் புகார்கள் அளித்துள்ளனர். இந்தியத் தூதரகமும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளது. இது போன்ற வெறுக்கத்தக்க விஷயங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கனேடிய அதிகாரிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் இது குறித்து லீனா மணிமேகலையிடம் பேசினோம். நீங்கள் அங்கிருந்து நேரலையில் கலந்து கொண்டு பேசலாமே என்றும் அழைப்பு விடுத்தோம்.

“நான் இருக்கும் டொரோன்டோ வரைக்கும் அவர்களின் எதிர்ப்பு வந்து சேர்ந்துவிட்டது. டெல்லி காவல் நிலையத்தில் எனக்கு எதிரான புகார் அளிக்கப்பட்டதாக அறிந்தேன். என் பல்கலைக்கழகத்தில் எனக்கான ஆதரவு பெருகி வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டரிலிருந்து நான் வெளியே வந்து விட்டேன். எனது இன்ஸ்டாகிராமிலிருந்து படங்களை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வடிவமைத்து வெளியிடுவதாக அறிகிறேன். அதன் காரணமாக அதிலிருந்தும் விலகிவிட்டேன்.

லீனா மணிமேகலை

எனது சொந்தங்களுக்கு ஏராளமான மிரட்டல்கள், வசவு வார்த்தைகளை போன் செய்து பேசுகிறார்கள். என் குடும்பத்தினர் மன அமைதியை இழந்துவிட்டதாக அறிகிறேன். இப்படி இருக்கிற சூழலில் நான் நேரலையில் பேச விரும்பவில்லை. என்னால் என் சொந்தங்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகள் என்னை சங்கடப்படுத்துகின்றன. அதற்காக நான் போட்ட பதிவை நீக்கப் போவதில்லை. என் படைப்புக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறவர்கள் அதைப் புரிந்துகொள்ளவே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கிய பிறகு மறுபடியும் பேசுகிறேன். இப்போது பேசும் நிலையில் நான் இல்லை” என்றார் லீனா மணிமேகலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.