புதுச்சேரி: அடுத்த ஆண்டு மகா புஷ்கரணி நடக்கவுள்ள சூழலில், புதுச்சேரியில் 64 அடி உயர சிவபெருமான் சிலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.
புதுவை வில்லியனுார் அருகே திருக்காஞ்சி கிராமத்தில் கங்கைவராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆலயத்தின் முக்கிய தீர்த்தமாக சங்கராபரணி ஆறு உள்ளது. கோயிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் கருவறைகளை ஒத்துள்ளது.
ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட மிக அபூர்வமான ஷோடசலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும். நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உட்பட பதினாறு செல்வங்களையும் அளிக்கும் என்பது ஐதீகம். சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மாமுனிவர் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்துள்ளதாக தல புராணம் கூறுகிறது.
சிறியதாக இருந்த கோயில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். சங்கராபரணி ஆறு கிழக்காக திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது, திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பிய பின் வங்கக்கடலில் சேர்கிறது. இத்தீர்த்தத்தில் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, மாதப்பிறப்பு, கார்த்திகை, சிவராத்திரி ஆகிய நாட்களில் புண்ணிய நீராடலாம். புகழ்பெற்ற கோவிலில் 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் 15 நாட்களுக்கு புஷ்கரணி திருவிழா முதல் முறையாக நடக்க உள்ளது.
இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது 64 அடியில் சிவன் சிலை அமைக்க பூமிபூஜை இன்று காலை நடந்தது. வேளாண்துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் அடிக்கல் எடுத்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், ஆலய தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் நடைபெறுவது தான் புஷ்கரணி விழா. அந்தவகையில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குருபகவான் இடம்பெயர்வதால் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழாநடைபெற இருக்கிறது. ஏப்ரலில் மொத்தமாக 24 நாட்களுக்கு இவ்விழா நடக்கும்.
ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டப்பட்டு வருகிறது. கலைநிகழ்வு நடத்த நிரந்தர மேடை, புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளதுபோல சுவாமியை பொதுமக்களே வழிபடும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
புஷ்கரணி விழாவையொட்டி கெங்கரவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆற்றில் கரையோரத்தில் 64 அடி உயரத்தில் பிரமாண்டமாக சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட உள்ளது. 20 அடியில் தியான பீடம் அமைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் சிவனின் பாதத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யலாம்.
இதற்கு மேல் 44 அடியில் பிரம்மாண்ட 8 அடுக்குகள் கொண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 8 அடுக்குகளிலும் சிவலிங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. சிவனின் சிரசு வரை சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிலை அமைக்கப்பட உள்ளது. புஷ்கரணிக்கு முன்பாக சிலை அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.