அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்கள் மிகவும் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் மீளமைக்க முடியாது
கேள்வி – பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றீர்கள்? அவை எப்போது நடைமுறைப்படுத்தப்படும்? அதற்கான கால எல்லை உண்டா?
பதில் – உண்மையில் நாம் ஏற்கனவே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் மீளமைக்க முடியாது.
அந்த நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு தேவையான ஆதரவைப் பெறுவதற்கு இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளன.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன்தான் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
2023 கடினமான ஆண்டாக இருக்கும்
கேள்வி – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் வழங்கும் நிபந்தனைகள் குறிப்பாக இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கடினமாக இருக்கலாம். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
பதில் – ஆம், இது ஒரு சாதகமற்ற நேரமாக இருக்கலாம். பல வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டன என்றே சொல்ல வேண்டும். எனினும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கூடுதலாக 200 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
நிலைமையைப் பரிசீலித்து, அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்வோம். 2023 ஆம் ஆண்டிற்கான பணத்தை நாங்கள் ஏற்கனவே ஒதுக்கியுள்ளோம்.
மேலும் உணவு நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த இது போதுமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
2023 கடினமான ஆண்டாக இருந்தாலும், 2024ல் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கும்.
மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்
கேள்வி – ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் பிரேரணையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதிக்கு இன்னும் சில அதிகாரங்கள் உள்ளதாகவே தோன்றுகிறது.
பதில் – செயற்பாட்டாளர்களின் கோரிக்கையின்படி, இந்திய மாதிரியில், அதிகாரங்கள் அற்ற பெயரளவிலான ஜனாதிபதி பதவியை இலங்கை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இதைப் பற்றி மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு பிரிவினர் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரும் அதேவேளை, மற்றொரு பிரிவினர் அந்த பதவியை நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். உண்மையில் அதற்கு இரண்டு தெரிவுகளை கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டாவது தெரிவை ஜனாதிபதி தெரிவு செய்துள்ளார்.
இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பிரச்சினை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அமைச்சரவையை மட்டும் கொண்ட ஆட்சியை எங்களால் நடத்த முடியாது.
நான் செய்வது நாடாளுமன்றத்தை மிகவும் திறந்த அணுகுமுறைக்கு பரிந்துரைப்பதாகும். இளைஞர்களின் கருத்துக்களுக்கு எப்படித் வழிவிடலாம் என்பதையும் பார்க்கிறது.
அவர்களின் கருத்துக்கள் இதுவரை புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது சரியான வாதம். அதனால்தான் நாம் அவர்களுக்குத் வழிவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.