நீலகிரி, கோவை மாவட்டங்களின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் பத்தாம் தேதி வரை, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப, சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. கோவை மற்றும் டவுன்ஹால், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதியத்திற்கு மேல் மழை பெய்தது.
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் கனமழை பெய்த நிலையில், சிறுவர் பூங்கா பகுதியில் மழை காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால், ஒரு வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM