புதுடெல்லி: வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்தலாம். இதில், தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை,’ என உத்தரவிட்டு, பொதுக்குழுவுக்கு தடை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நள்ளிரவு வரை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, ‘பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும், அது குறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது,’ என உத்தரவிட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இருப்பினும், கடந்த மாதம் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 23 தீர்மானங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிராகரித்து அறிவித்தது. அதே போல், தமிழ்மகன் உசேனும் அதிமுக.வின் நிரந்த அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, ஓ.பன்னீர் செல்வமும், அவருடைய ஆதரவு தலைவர்களும் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கடந்த மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சண்முகம் கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த மாதம் 28ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். இதில், நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதனால், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பாலாஜி சீனிவாசன் ஆகியோர், ‘கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இது ஒரு கட்சியின் தனிப்பட்ட உள்விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை. உயர் நீதிமன்றத்தின் வரம்பு மீறிய இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ‘23 தீர்மானங்களை தவிர வேறு எதையும் பொதுக்குழுவில் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட அன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. இதில், மேற்கொண்டு விசாரிக்க என்ன இருக்கிறது? மேலும், அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதால் அதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதும் ஒன்றுமில்லையே?’ என கேட்டார். இதற்கு பதிலளித்த சண்முகம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் மணீந்தர் சிங், குரு கிருஷ்ண குமார் ஆகியோர், ‘கடந்த 2017ம் ஆண்டு அதிமுக.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகள் 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். அதுதான் அதிமுக கட்சியின் சட்ட விதிகளாகும். ஆனால், அதை மீறும் வகையில் இந்த 2 பதவிகளையும் ரத்து செய்து விட்டு, ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். மேலும், கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. கட்சியில் விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிடலாம்,’ என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருப்பினும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். அதேப்போல், உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அடுத்த 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இருப்பினும், 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு தொடர்பாக யாருக்கேனும், ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டாலோ அல்லது தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலோ, இந்த வழக்கை இதற்கு முன் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை அணுகி நிவாரணம் பெறலாம். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வரும் 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை. அதே நேரம், அதற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த புதிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நீதிபதி சரமாரி கேள்விநேற்று நடந்த விசாரணையின்போது நீதிபதி தினேஷ் மகேஸ்வரி பலமுறை குறுக்கிட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் வருமாறு:* உங்கள் கட்சிக்குள் என்ன முடிவெடுக்க வேண்டும், என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றம்தான் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?* நட்போ, பகையோ, உறவோ அனைத்தையும் நீங்களே தான் முடிவு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதிமுக.வின் உள்விவகாரம், பொதுக்குழு நடத்துவது ஆகியவை குறித்து நாங்கள் எப்படி தலையிட முடியும்? * அதேப் போன்று, வரும் 11ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் பொதுக்குழு விவகாரத்திலும் நாங்கள் தலையிட்டு எவ்வாறு உத்தரவும் பிறப்பிக்க முடியும்? கட்சியின் கொள்கை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை. உங்கள் பிரச்னையை நீங்கள்தான் சரி செய்து கொள்ள வேண்டும்.