ராசிச்சக்கரத்தில் முதல் வீடு மேஷ ராசி. இந்த வீட்டின் அதிபதி செவ்வாய். செவ்வாய் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது ஆட்சி பலம் பெறுவார். தற்போதைய கிரக நிலவரங்களின் படி ஏற்கெனவே ராகு பகவானும் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் செவ்வாய் – ராகு சேர்க்கை அந்த ராசியில் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே ராகு பகவனோடு எந்த கிரகம் இணைந்தாலும் அந்த கிரகத்தின் பலமும் பலனும் அதிகரிக்கச் செய்வார் ராகு. இதனால் உண்டாகும் பொதுபலன்கள் என்னென்ன… 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் ஏற்படும் என்று ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.
செவ்வாய் – ராகு சேர்க்கை – பொது பலன்கள் – ஜூலை 17 மேல் கவனம்
“பொதுவாகவே ராகு கேது இருவருமே கிரக சஞ்சாரங்களில் முக்கியமான நிகழ்வுகளை வாழ்வில் நிகழ்த்துவதற்குக் காரணமாவர்கள். அந்த வகையில் தற்போது செவ்வாயுடனான ராகுவின் சேர்க்கை உலக அளவில் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. தற்போது சுக்கிரனின் சாரமான பரணி நட்சத்திரத்தில் ராகு பகவானும் கேதுவின் சாரத்தில் வரும் அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் பகவானும் சஞ்சாரம் செய்வது கவனிக்கத்தக்கது. இந்தக் காலகட்டத்தில் நோய்த் தொற்று பரவலும் பலருக்கும் ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதற்கான காலமும் ஆகும். அதே வேளையில் ஞானகாரகனான கேதுவின் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் கும்பாபிஷேகம் போன்ற பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெறும். தற்போது பல ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறாத ஆலயங்களில் கூடத் தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதைப் பார்க்கிறோம்.
ஏற்கெனவே சொன்னதுபோல தற்போது செவ்வாய் பகவான் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஜூலை 17 ம் தேதி முதல் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். அப்போது ராகு – செவ்வாய் இருவருமே ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்கள். இது மிகவும் கவனம் தேவைப்படும் காலம். ஜூலை -17 ம் தேதிக்கு மேல் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே வேளை விவசாயிகள் எதிர்பார்க்கும் மழைப் பொழிவு இருக்கும். அது விளைச்சலுக்கு உதவும். புதிய தொழில்கள் தொடங்கவும் இது உகந்த காலமாக விளங்கும்.
இனி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களைப் பார்ப்போம்.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் – ராகு சேர்க்கை நற்பலன்களையே தரும். அதிலும் குறிப்பாக ஜூலை 17 ம் தேதி செவ்வாய் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும்போது அதிக தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிடைக்கும்.
ரிஷபம் :
ரிஷபராசிக்காரர்களுக்கு செவ்வாய் விரைய ஸ்தானத்துக்குண்டான அதிபதி. அதே வேளையில் அவர் ஜூலை 17 ம் தேதி முதல் உங்களின் ராசி அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். எனவே தனலாபமும் சுப விரையமும் மாறி மாறி ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மேஷம் 11 – ம் இடமாகிய லாப வீடு. எனவே இந்த சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பொருள்வரவைத் தரும் சேர்க்கையாக அமையும். அதிலும் ஜூலை 17 – ம் தேதிக்கு பிறகு செவ்வாயும் பரணி நட்சத்திரத்தில் ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கும் காலகட்டத்தில் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்புண்டு.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மேஷம் 10 – ம் இடம். இங்கு ஏற்பட்டிருக்கும் ராகு செவ்வாய் சேர்க்கை நல்ல முன்னேற்றங்களைக் கொடுக்கும். குறிப்பாக உத்தியோகம் தொடர்பாக ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்ல இருந்த தடைகள், விசா பெறுவதில் இருந்த சிக்கலகள் நீங்கும்.
சிம்மம்
சிம்மராசிக்கு பாக்கியஸ்தானமான மேஷத்தில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. மேலும் ராசி அதிபதியான சூரியனும் 12 – ம் இடமான கடகத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த கிரக மாற்றங்கள் எல்லாமே நல்ல பலன்களைக் கொடுக்கும். செலவுகள் அதிகரித்தாலும் ஏற்கெனவே இருந்த வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றிகிடைக்கும். பெண்களுக்குப் பிதிர்ராஜ்ஜிய சொத்துகள் சேரும் வாய்ப்பு உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மேஷம் எட்டாம் வீடு. அஷ்டமாதிபதி செவ்வாய் எட்டில் வலுப்பெற்று அமர்ந்திருக்கிறார். பொதுவாகவே அஷ்டமாதிபதி வலுப்பெறக்கூடாது. அதிலும் அவர் ராகுவோடு இணைந்து சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்களும் பிரச்னைகளும் வந்த வண்ணம் இருக்கும். புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். மற்ற கிரகங்கள் சாதகமாக இருப்பதாலும் ராசிக்கு குரு பார்வை இருப்பதாலும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மேஷம் ஏழாம் வீடு. அதிலும் சுக்கிரன் ஆட்சி பலம் பெறும் வீடு துலாம். எனவே சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் ராகு – செவ்வாய் சேர்ந்து சஞ்சாரம் செய்வது என்பது துலாம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும். குறிப்பாகப் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வது, காதலில் இருப்பவர்களின் வாழ்க்கைத் திருமணத்தில் முடிவது என்று அனைத்தும் சுபமாகவே முடியும்
விருச்சிகம்
விருச்சிக ராசியும் செவ்வாயின் ஆட்சி வீடுதான். ராகு பகவானுக்கு உச்ச வீடு. எனவே இந்த சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்களையே கொடுக்கும். இழந்த சொத்துகள், கொடுத்த கடன்கள் ஆகியன இந்த காலகட்டத்தில் கிடைக்க வாய்ப்புண்டு. என்றாலும் உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகளும் அது தொடர்பான நோய்களும் ஏற்படலாம் என்பதால் அதை கவனத்தில் கொள்வது நல்லது.
தனுசு
தனுசுக்கு 5 – ம் வீடு மேஷம். அங்கே நட்பு கிரகங்களான செவ்வாயும் ராகுவும் இணைந்து சஞ்சரிப்பது மிகவும் நல்ல பலன்களைத் தரும். மேலும் ராசி அதிபதி குரு மீனத்தில் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது மிகவும் நல்ல பலன்களைத் தரும். குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளுக்கு அது கிடைக்கும் காலமாக இது அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நான்காம் வீடான மேஷத்தில் செவ்வாயும் ராகுவும் இணைவது குறிப்பிட்ட சில நற்பலன்களைத் தரும். செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறும் கிரகம். எனவே அது தன் சொந்த வீட்டில் ஆட்சி பலம் பெற்று அமர்வது நல்லது. செவ்வாய் என்றாலே மனை, வீடு ஆகியவற்றின் அதிபதி என்று கொள்ளலாம். வீடு வாங்குவது, புதிய வீடுகட்ட மனை வாங்குவது, அதற்கான அப்ரூவல், வங்கிக்கடன் ஆகியன கிடைக்கும் காலம் என்பதால் அதற்கான முயற்சிகளில் துணிந்து இறங்கலாம்.
கும்பம்
ஏழரை சனியின் ஆதிக்கத்தால் தடுமாறும் கும்பராசிக்காரகளுக்கு மூன்றாம் வீட்டில் நிகழும் இந்த ராகு – செவ்வாய் சேர்க்கை நற்பலன்களையே கொடுக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பது மிகவும் பலமாகும். எனவே ஏழரை சனியின் பாதிப்புகள் மிகவும் குறைந்து காணப்படும் காலகட்டமாக இது இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடம் மேஷம். அதன் அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு என்றே சொல்லலாம். இதுவரை உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தேடிவருவார்கள். நட்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ஜூலை 17 முதல் நல்ல மகிழ்ச்சியான காலமாக இது அமையும்.