புதுடெல்லி: சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மனைவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் உத்தரபிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் சிறையில் இருப்பவர் முன்னாள் எம்.பி. ஆசம் கான். வழக்குகளில் ஜாமீன் பெற்று தற்போது வெளியே உள்ளார் ஆசம் கான். இவர் தற்போது ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு ஆசம் கானின் மனைவி தசீன் ஃபத்மா, அவரது மகனும், ஸ்வார் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான அப்துல்லா ஆசம் கான் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வாரத்தில் லக்னோவிலுள்ள அமலாக்கப் பிரிவின் மண்டல அலுவலகத்தில் தனித்தனியாக ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே வழக்கில் ஏற்கெனவே ஆசம் கானிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.