இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகன உற்பத்தியும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முக்கிய தேவையான லித்தியம் என்ற கனிமத்தை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காற்றில் இருந்து தண்ணீர்.. லிட்டர் வெறும் 4 ரூபாய் தான்.. அசத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!
இதுகுறித்து நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் ஆஸ்திரேலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மின்சார வாகனங்கள்
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பேட்டரி உற்பத்தியில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பல இடங்களை ஆராய்ந்து வருகிறது. உலகளவில் மின்சார வாகனங்கள் உட்பட சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதால், உலகின் மிகப்பெரிய லித்தியம் ஏற்றுமதியாளரான ஆஸ்திரேலியா இந்தியாவின் கணிசமான லித்தியம் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஜோஷி
ஆஸ்திரேலிய அமைச்சர் மேடலின் கிங் அவர்களுடன் நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் அமைச்சர் ஜோஷி கூறியபோது, ‘நாங்கள் சமீபத்தில் கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் மற்றும் ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமங்கள் வசதி அலுவலகம் (CMFO) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இந்த ஒப்பந்தம் கனிமங்களின் விநியோகத்தை உறுதி செய்துள்ளது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் முக்கியமான கனிமங்களை பரிமாறி கொள்ளும் பங்காளிகளாக மாறியுள்ளன. மேலும் இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டன. இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு உதவும் முக்கியமான கனிமங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஆஸ்திரேலியா உதவி செய்யும்.
லித்தியம் மற்றும் கோபால்ட்
ஆஸ்திரேலியாவில் லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கியமான கனிமங்கள் உள்ளன, அவை பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கு முக்கியமானவை. ஆஸ்திரேலிய அமைச்சர் கிங்குடனான பேச்சுகளைத் தொடர்ந்து, ஜோஷி குவினானாவில் உள்ள தியான்கி லித்தியம் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.
இந்தியா-ஆஸ்திரேலியா
இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இயற்கையான கனிம பரிமாற்ற பங்காளிகள் என்று அழைத்த ஜோஷி, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும், மேலும் கனிமத் துறையில் ஒத்துழைப்பிற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவு-பகிர்வு மற்றும் லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கியமான கனிமங்களில் முதலீடு ஆகியவை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.
இந்திய ஒப்பந்தம் காரணமாக ஆஸ்திரேலியாவின் லித்தியம் ஏற்றுமதியின் மதிப்பு 2021-22ஆம் ஆண்டில் $4.1 பில்லியனாக இருந்து வரும் நிலையில் 2023-24ஆம் ஆண்டில் $9.4 பில்லியனாக இருமடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் லித்தியம் ஏற்றுமதி 1.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
India to Import Lithium from Australia: Electric Vehicles Production will goes up!
India to Import Lithium from Australia: Electric Vehicles Production will goes up! | ஆஸ்திரேலியாவில் இருந்து லித்தியம் இறக்குமதி… வேற லெவலில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு திட்டம்!