குந்தி: ஜார்கண்ட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த இமாச்சல் பிரதேச ஐஐடி மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக வந்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐஐடி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து குந்தி காவல் கண்காணிப்பாளர் அமன் குமார் கூறுகையில், ‘இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக எட்டு ஐஐடி மாணவ, மாணவிகள் ஜார்கண்ட் வந்தனர். அவர்களை ஐஏஎஸ் அதிகாரியான ரியாஸ் அகமது, தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவர்களுக்கு விருந்து கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி மாணவ, மாணவியருக்கு விருந்து கொடுத்தார். அதில் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மாணவி தவிர, மற்றவர்கள் வெளியே சுற்றிப் பார்க்க சென்றனர். மாணவி தனியாக இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமது, அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி, அவரது பிடியில் தப்பி வெளியே சென்றுவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவர்களிடம் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் அடுத்த நாள் உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் முகமது மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 509 ஆகிய பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.