பெங்களூரு : ”தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கை திட்டமிட்டு மூடி மறைத்திருப்பர். யாரையும் ராஜினாமா செய்யும்படி கூறும் தார்மீக உரிமை காங்கிரசுக்கு இல்லை. உள்துறை அமைச்சரிடம் ராஜினாமா பெற வேண்டிய அவசியம் இல்லை,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ரித் பால் கைதால், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது:காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரண்டு முறை எஸ்.ஐ., தேர்வு வினாத்தாள் கசிந்தது. உயர் அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரை விசாரிக்கவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை.ஆனால் பா.ஜ., ஆட்சியில் சி.ஐ.டி., போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கி, கூடுதல் டி.ஜி.பி.,யிடம் விசாரித்து, கைதும் செய்துள்ளோம். யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைகேடு செயல்பாடுகளை சகித்து கொள்ள மாட்டோம். எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் விட மாட்டோம்.தற்போது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கை திட்டமிட்டு மூடி மறைத்திருப்பர். யாரையும் ராஜினாமா செய்யும்படி கூறும் தார்மீக உரிமை காங்கிரசுக்கு இல்லை. உள்துறை அமைச்சரிடம் ராஜினாமா பெற வேண்டிய அவசியம் இல்லை.கைது செய்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் போலீசார். மிகவும் நேர்மையுடன் சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement