காடுகளின் காவலன் என போற்றப்படும் நிலத்தில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகள் தங்களது பசியினை போக்கவே வேறு வழியின்றி வனத்தை விட்டு வெளியேறுவதால் மனிதன் – யானை மோதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளன. பவானி ஆறு பாயும் இயற்கை வளம் மிகுந்த இப்பகுதியில் பாக்கு, வாழை, கரும்பு, தென்னை, சோளம், பல்வேறு காய்கறிகள் மற்றும் பழவகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டை விட்டு வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு வரை விவசாய பயிர்கள் இவற்றால் அழிக்கப்பட்டு வருகின்றன.
பத்து மாதங்கள் வரை பாதுகாத்து வளர்க்கப்படும் வாழை மரங்கள் முதல் பத்தாண்டுகள் வரை போராடி வளர்த்த பாக்கு, தென்னை போன்ற மரங்கள் வரை ஒரே இரவில் யானைக்கூட்டங்களால் சாய்க்கப்பட்டு மண்ணோடு மண்ணாகி விடுவதால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் தொடர் இழப்புகளை தாள இயலாமல் பரிதவித்து நிற்கின்றனர். இதனை தடுக்க வேண்டிய வனத்துறையோ ஊழியர் பற்றாக்குறையால் திணறி வருவதாக கூறப்படுகிறது.
ஊழியர் பற்றாக்குறையில் வனத்துறை?
கோவை வனக்கோட்டதில் முக்கிய வனச்சரகமாக உள்ள மேட்டுப்பாளையத்தில் 35 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் கார்டு, வாட்சர் என பணியிடங்கள் நிரப்பபடாமல் வனச்சரக அலுவலர் உள்பட 16 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மிக குறைந்த எண்ணிகையில் உள்ள இவர்களால் யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதையோ இவற்றால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கவோ இயலாத காரியமாகி விட்டது. இதனால் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை உள்ளிட்ட விவசாய தோட்டங்கள் பலவும் போர்க்களமாக காட்சியளிக்கின்றன.
உணவுப்பற்றாக்குறையும் முக்கியக் காரணம்!
இந்நிலையில், யானைகள் கூட்டம் கூட்டமாக காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதற்கு காடு அழிப்பு, அதன் வலசை பாதை ஆக்கிரமிப்பு என பொதுவாக காரணங்கள் கூறப்பட்டாலும் வனத்திற்குள் அவற்றுக்கு தேவையான பசுந்தீவனங்கள் இல்லாததே மிக முக்கிய காரணம் என்கின்றனர் இங்குள்ள விவசாயிகளும் வன உயிரின ஆர்வலர்களும். காட்டிற்குள் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கடும் கோடை காலத்தில் ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும், அதற்கும் தீர்வாக வன எல்லையில் ஏராளமான இடங்களில் செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் கட்டுப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக கூறும் இவர்கள், யானைகள் காட்டிற்குள் இயற்கையாய் கிடைக்கும் தீவனங்கள் இல்லாத காரணத்தினால் தான் உணவு தேடி ஊருக்குள் நுழைவதாக தெரிவிக்கின்றனர்.
அபாயக்கட்டத்தில் மனிதன் – யானை மோதல் சம்பவங்கள்:
இதற்கு தீர்வாக சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டிற்குள் “தீவனத்தோட்டம்” அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை வனத்துறையினர் முறையாக செயல்படுத்தாததே இத்திட்டம் தோல்வியடைய காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. காடுகளின் காவலன் என போற்றப்படும் நிலத்தில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகள் தங்களது பசியினை போக்கவே வேறு வழியின்றி வனத்தை விட்டு வெளியேறுவதால் மனிதன் – யானை மோதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்நிய வகை மரங்களில் அபரிமிதமான ஆக்கிரமிப்பு!
யானை தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என எதுவும் பசி போக்க வரும் யானைகளின் நுழைவை தடுக்க முடியவில்லை. காலம் காலமாக யானைகள் விரும்பி உண்டு வாழ்ந்த புல் வகைகள், தாவரங்கள் செடி கொடிகள் மற்றும் மர வகைகள் மெல்ல மெல்ல அழிந்து காட்டை ஆக்கிரமித்து வரும் அந்நிய வகை மரங்களும் தாவர வகைகளும் வனத்தின் இயற்கை சூழலை பாழாக்கி வருகின்றன.
ஆய்வுப்பணியை துவக்கி இருப்பது ஆறுதல்!
இதனை கருத்தில் கொண்டு வனத்துறையுடன் இணைந்து களத்தில் இறங்கியுள்ள மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், யானைகள் மற்றும் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணும் பயிர் வகைகளை கண்டறிந்து அவற்றை காட்டிற்குள் குறுகிய காலத்திற்குள் பரவலாக வளர்த்தெடுப்பது குறித்து ஆராய்ச்சி பணிகளை துவக்கியுள்ளது சற்று ஆறுதல் தரக்கூடிய தகவலாக பார்க்கப்படுகிறது.
காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டங்கள் நடைமுறைபடுத்தபட்டு வந்தாலும் இயற்கை காடுகளுக்குள் அழிந்து வரும் தாவர இனங்களை, மர வகைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. கோவை வனக்கோட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே உள்ள பிரச்சனையாக நீடிக்கும், வனத்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை பணி நியமனங்கள் மூலம் சரி செய்வது, இயற்கை காடுகளை பாதுகாத்து வனத்திற்குள்ளேயே விலங்கினங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்க செய்வது போன்ற திட்டங்களை தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் : இரா.சரவணபாபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM