பர்மிங்காம் டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்த பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘வீரர்கள் இது போன்று விளையாடும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்து விட்டால் இத்தகைய இலக்கை அடைவது எளிது. 5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது அச்சத்தை அளித்திருக்கும். ஆனால் இப்போது எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லா பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும்.
இங்கிலாந்து மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மறுமலர்ச்சியை கொடுக்க விரும்புகிறோம். இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் ‘ என்றார்.
மேலும் அவர், ‘எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி 3-வது இன்னிங்சில் எதிரணியினர் பயப்படுவார்கள். அதாவது எவ்வளவு இலக்கு நிர்ணயித்தால் போதுமானதாக இருக்கும், நாங்கள் 4-வது இன்னிங்சில் எந்த மாதிரி ஆடுவோம் என்பதில் தெளிவு கிடைக்காமல் குழம்புவார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.