TNEA counselling: Best college or Best course which one is important?: பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, பொறியியல் கவுன்சிலிங் (Engineering Counselling) தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே உள்ள மிகப் பெரிய குழப்பம் சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதா? அல்லது பிடித்த பாடப்பிரிவை தேர்வு செய்வதா? என்பதுதான்.
பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடக்க உள்ள நிலையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைனிலே நிரப்ப வேண்டும். அதில் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளில் ஒதுக்கீடு கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling: கம்ப்யூட்டர் சயின்ஸ் vs ஐ.டி; எது பெஸ்ட்? என்ன வித்தியாசம்?
இதில், தரமான கல்லூரிக்கு முக்கியவத்தும் அளிப்பதா? அல்லது விரும்பிய பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளிப்பதா? என்பது மாணவர்களிடையே உள்ள பெரும் குழப்பம். பெரும்பாலானவர்களின் எண்ணம் தரமான கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில், இதில் நினைத்தது நடக்காமல் போகலாம். எனவே எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அவரது விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
பெரும்பாலான மாணவர்கள் பாடப்பிரிவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) படிப்பை அதிகமானோர் விரும்புகிறார்கள். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான இடங்கள் குறைவாக உள்ள நிலையில், எல்லோருக்கும் அந்த பாடப்பிரிவு கிடைப்பது சாத்தியமற்றது. மேலும் விரும்பிய பாடப்பிரிவுக்காக, தரமான கல்லூரியை நிராகரிப்பது சரியானது அல்ல. விரும்பிய பாடப்பிரிவு டாப் மோஸ்ட் கல்லூரியில் கிடைக்காத நிலையில், அதற்காக தரநிலையில் கீழே உள்ள கல்லூரிகளை விரும்பிய பாடப்பிரிவுக்காக தேர்ந்தெடுப்பதை விட, தரமான கல்லூரியில் வேறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
ஏனெனில் டாப் மோஸ்ட் கல்லூரியில் படிக்கும்போது, அந்தக் கல்லூரியின் தரம், கற்பித்தல் முறை, நம்பகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நிலை, போன்றவை உங்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பை பெற்றுத் தரும்.
அதேநேரம், தரநிலையில் கீழே உள்ள கல்லூரிகளில் உங்களுக்கு விரும்பிய பாடங்களை படிக்கும்போது உங்களுக்கான வேலைவாய்ப்பு நிச்சயமற்றதாக இருக்கும்.
அதேநேரம் டாப் மோஸ்ட் கல்லூரிகளில் வேறு பாடப்பிரிவுகளை படிக்கும்போதும், உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை பெரும்பாலான மாணவர்கள் விரும்புவதற்கு காரணம், ஐ.டி (IT Company’s) கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அதேநேரம், டாப் மோஸ்ட் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ-வுக்கு வரும் ஐ.டி கம்பெனிகள் அந்த கல்லூரிகளில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களை மட்டுமல்லாது, பிற பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களையும் வேலைக்கு எடுக்கின்றன. இது ஐ.டி கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, பிற நிறுவனங்களும், அவர்களுக்கு ஏற்ற மற்ற பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களையும் இது போன்ற டாப் கல்லூரிகளில் இருந்து வேலைக்கு எடுக்கின்றன. எனவே விரும்பிய பாடப்பிரிவை விட கல்லூரியே முக்கியம். இவ்வாறு ரமேஷ்பிரபா விளக்கம் அளித்துள்ளார்.