கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இன்ஜினியரான இவர் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபராவார். தவிர, நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும், அதிமுக புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலராகவும் உள்ளார். அத்துடன், சில நிறுவனங்களையும் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில், 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று மதியம் வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் சந்திரசேகர், சர்மிளா சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர். தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், உள்ளே இருந்த தொலைபேசி இணைப்புகளை துண்டித்தனர். வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே செல்லவும், வெளியே இருப்பவர்களை உள்ளே நுழையவும் தடை விதித்தனர்.
பின்னர், வீட்டிலிருந்த ஒவ்வொரு அறையாகச் சென்று, பைல்களை தேடித் தேடி எடுத்து ஆய்வு செய்யத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து வீட்டு வேலையாளை அழைத்துக் கொண்டு இரண்டு அதிகாரிகள் வெளியே வந்தனர். அவர்கள் அங்கிருந்து பி.என்.புதூரில் உள்ள சந்திரசேகரின் தந்தை ராஜன் வீட்டுக்குச் சென்று, அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.
6 இடங்களில் சோதனை: அதேபோல், அவிநாசி சாலை பீளமேட்டில் தனியார் மகளிர் கல்லூரி எதிரே உள்ள வணிக வளாகத்தில், சந்திரசேகருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. அங்கும் வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினர்.
அதேபோல், சந்திரசேகருக்கு நெருக்கமான மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சந்திரசேகரின் உதவியாளர் உள்ளிட்டோரின் இடங்கள் தான் அவை எனக் கூறப்பட்டாலும், அந்த 3 இடங்களும் எவை என தெரிவிக்க வருமான வரித்துறையினர் மறுத்து விட்டனர்.
சில மணி நேர சோதனைக்கு பின்னர், 4 பேர் அடங்கிய குழுவினர் ஒரு பை நிறைய பைல்களுடன் சந்திரசேகர் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
மீதமுள்ள 2 அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனையை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை சந்திரசேகர் உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டறிந்து விசாரித்தனர்.
இந்த சோதனை இன்று மாலை வரை தொடர்ந்தது. அதேபோல், அடுத்த சில நாட்களுக்கு இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
வரும் 11-ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை சக நிர்வாகிகளுடன், முன்னின்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு மிக நெருக்கமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சந்திரசேகர் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.