தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரைச் சேர்ந்தவர் மீனா. இவர் கடந்த 2016-இல் தேனி நகரில் உள்ளதொரு மொபைல் ஷோரூமில் ஆப்பிள் ஐபோன் 5 என்ற மாடல் மொபைலை ஒராண்டு உத்தரவாதத்துடன் வாங்கி உள்ளார்.
இந்நிலையில், வாங்கி பயன்படுத்திய ஆறாவது மாதத்திலேயே அந்த ஆப்பிள் ஐபோன் மொபைல் பழுதாகியது. அந்த மொபைலை ஆன் செய்ய முடியாத நிலைக்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து மொபைல் வாங்கிய நிறுவனத்தில் மொபைலில் ஏற்பட்ட பழுதை நீக்கித் தரச் சொல்லி மீனா கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு பழுது நீக்கி தராமல் அவருக்கு உரிய பதிலும் அளிக்காமல் அலைக்கழிப்பு செய்துள்ளனர்.
அப்போது அந்த மொபைல் ஷோரூமில் ஆப்பிள் ஐபோன் நிறுவன மொபைல்களை விற்பனை செய்வதற்கு அங்கீகாரமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஐபோன்களை விற்பனை செய்வது மட்டுமில்லாமல் போலியாக ஒரு வருட உத்தரவாதம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மீனா, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உறுப்பினர்கள் மனுதாரர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் நுகர்வோர் ஏமாற்றப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நுகர்வோரான மீனாவிற்கு தேனியில் உள்ள மொபைல்ஸ் நிறுவனம் 2,58,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்த நுகர்வோருக்கு மேலும் புதிய ஆப்பிள் ஐபோன் மொபைல் போன் ஒன்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.