யூடியூப் உணவுப் பிரியர்களால் புகழப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்டில் 45 கிலோ எடை கொண்ட அழுகிய சிக்கன், மட்டன், இறால் மீன் போன்றவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஓசி சாப்பாட்டிற்காக ‘ஆஹா ஓஹோ’வென புகழ்ந்தவர்களால் சாப்பிடச் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
பிரபல யூடியூபரான இர்பான் என்பவரால் ஆஹா ஓஹோவென்று புகழப்பட்டதை நம்பிச் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு அழுகிய இறாலில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கிய புகாருக்குள்ளாகி பூட்டுப் போடப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரென்ட் இதுதான்..!
யூடியூபில் ரிவியூ சொல்வதாகக் கூறி ஓட்டலுக்குள் புகுந்து, அனைத்து வகையான உணவையும் ஓசியில் சாப்பிட்டு விட்டு, அட்டகாசமாக இருப்பதாக சில யூடியூபர்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட யூடியூப் உணவுப்பிரியர்களால், சென்னை அண்ணா நகரில் பிரபலமாக்கப்பட்ட ரோஸ்வாட்டர் ரெஸ்டாரண்டில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு காசு கொடுத்து சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு பரிமாறப்பட்ட உணவில் இறால் கெட்டுப்போய் அழுகிய வாடை வீசுவதாக அளித்த புகாரின் பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அங்குள்ள உணவு தயாரிப்பு கூடம், இறைச்சி பதப்படுத்தும் இயந்திரங்கள், இடங்கள் போதிய வகையில் பராமரிப்பில்லாமல் இருந்தன. இங்கிருந்து 10 கிலோ கெட்டுப்போன இறால் , அழுகிய 45 கிலோ சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது
கெட்டுப்போன இறைச்சியை வைத்திருந்த குற்றத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், உணவு பதப்படுத்தும் இடங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், முறையற்று இருக்கும் இடத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதோடு. புதுப்பித்ததும், மீண்டும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னரே உணவகம் செயல்பட வேண்டும், அதுவரை இந்த ஓட்டல் செயல்படக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.
வாங்கும் பணத்திற்கு ஏற்ப சாப்பிடுவோரின் உடல் நலனை கருத்தில் கொண்டு தரமான உணவுகளை வழங்க தவறினால் இறுதியில் என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு பூட்டப்பட்ட இந்த ஓட்டலே சான்று..!