கடக்காலில் உருவான கடக்காலீஸ்வரர் – கடையநல்லூர் சிவன் கோயில் அதிசயங்கள்!

தமிழகத்தின் மிகப்பெரிய தென் எல்லை மாவட்டமாகத் திகழ்ந்து வந்த திருநெல்வேலி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒருபகுதி தென்காசி மாவட்டமாக உருவாகியது. ஐவகை நிலங்களும் அமையப்பெற்ற நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்திருக்கும் தென்காசி, தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி காட்சியளிக்கிறது.

கடக்காலீஸ்வரர்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், தென்றல் தவழும் குற்றாலத்தை அது வரமாகப் பெற்றிருக்கிறது. இயற்கை அன்னையின் மடியில் தவழும் தென்காசி மாவட்டத்தில் கடனா நதி, குண்டாறு, அடவி நயினார் ஆறு, ராமநதி, கருப்பா நதி என மிகப்பெரிய நீர்த் தேக்கங்கள் அமையப்பெற்றுள்ளன. இதில் கருப்பா நதி, கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. தென் பொதிகை தென்றல் வீசும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த அழகே உருவான ஊர் கடையநல்லூர்.

கடையநல்லூருக்குப் பல சிறப்புகள் உண்டு. இக்கோயிலில் கடக்காலீஸ்வரர், கரும்பால் மொழி அம்பாள் சந்நிதிகளும், விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆறுமுக நயினார், துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர் உபசந்நிதிகளும் உள்ளன. இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில், உபகோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இத்திருக்கோயில் திறந்திருக்கும்.

கடக்காலீஸ்வரர்

கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள சுவாமி கடக்காலீஸ்வரர் தோன்றிய வரலாறு என்பது அகத்திய மாமுனி தென்னாடு விஜயம் சென்றபோது கடையநல்லூருக்கு வந்தபோதே தொடங்குகிறது. அப்போது இங்குள்ள ஆநிரை மேய்ப்பவர்கள் அகத்திய முனிவருக்கு மூங்கில் கடக்காலில் (மூங்கிலால் உருவான குடுவை) பால் கொடுத்து உபசரித்தனர். பின்னர், ஆநிரை மேய்ப்பவர்கள் மாடு மேய்க்கச் சென்றுவிட்டனர். அகத்திய மாமுனி அந்த கடக்காலையே தலைகீழாகக் கவிழ்த்து சிவலிங்கமாக உருவம் செய்து வழிபட்டார். வழிபாடு முடிந்து அகத்தியர் சென்றுவிட்டார்.

ஆநிரை மேய்ப்பவர்கள் மாலையில் வந்து கடக்காலை நிமிர்த்த முயற்சி செய்தபோது அதை நிமிர்த்த முடியவில்லை. நிமிர்த்த முடியாததால் இடையர்கள் அதைக் கோடாரி கொண்டு உடைக்க முயன்றனர். அப்போது கடக்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதைப் பார்த்துப் பயந்த இடையர்கள் மன்னர் வல்லப பாண்டியனிடம் சென்று முறையிட்டனர்.

கடக்காலீஸ்வரர் சந்நிதி

பார்வைக் குறைபாடுடைய வல்லப பாண்டிய மன்னர் வந்து அந்த கடக்காலை தம் இரு கரங்களால் தடவி கண்களில் ஒற்றிக் கொண்டதும் கண்களுக்குப் பார்வை கிடைத்தது. இதனால் மனமகிழ்ந்து, ‘கண் கொடுத்த கமலேசா’ என்று அழைத்து இந்த கடக்காலீஸ்வரர் கோயிலைக் கட்டினார். தற்போது உள்ள இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள்.

கடக்காலில் தோன்றியதால் கடக்காலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். முன்பு ‘வில்வபுரி’ என்றும் ‘திருமலைக்கொழுந்துபுரம்’ என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், கடக்கால் நல்லூர் என்றும் நாளடைவில் கடையநல்லூர் என மருவியதாகவும் தல வரலாறு கூறுகிறது. மந்தபுத்தி விலக, பார்வைக் கோளாறு நீங்க, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

கடக்காலீஸ்வரர்

சக்தி வடிவான கரும்பால்மொழி அம்மனுக்கு இங்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. ‘கருவைக் காப்பவள், மாட்சிமைப்படுத்துபவள்’ எனப் பொருள் உண்டு என்கிறார்கள். இந்தப் பகுதி பெண்கள் கர்ப்பமுற்றால் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள். தாயும் சேயும் நல்லபடியாகப் பிறந்தால் மஞ்சளைச் சாற்றி வழிபடுவதாக வேண்டிக்கொள்வார்கள். அதன்படி நல்லபடியாகப் பிரசவம் ஏற்படும். பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இதுபோல் மாடு கன்று போட்டாலும் அம்மனுக்கு மஞ்சள் சார்த்தி நன்றி செலுத்தும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாள், துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் குமார சஷ்டி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜர் சந்நிக்கு அடியில் பழங்காலத்தைச் சேர்ந்த பாதாளச் சுரங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிராகாரத்தில் விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் சனிபகவான் ராகு – கேதுக்களுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது. ராகு – கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4.30 – 6.00 இங்கு ராகு கால சிறப்புப் பூஜை நடைபெறுகிறது.

குமார சஷ்டி

இக்கோயிலில் நவராத்திரி பூஜை, பௌர்ணமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் ஆகியவையும் மாசி மாத பௌர்ணமி பூஜை காலையில் ஹோமங்கள், அபிஷேகங்கள் ஆராதனைகளும் மாலையில் திரிசதி அர்ச்சனை பாராயணங்களும் சிறப்பாக ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. இதுதவிர செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் விமரிசையாக நடந்து வருகின்றது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.