திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று (ஜூலை 5) பா.ஜ.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருச்சியில் மாநகர் மாவட்ட பா.ஜ.க., சார்பில் கண்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க., தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
போராட்ட நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தவறான ஆட்சியை, ஊழல் நிறைந்த ஆட்சியை, போதைகளுக்கு துணை போகும் ஆட்சியை, தமிழை அழிக்கின்ற ஆட்சியை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க.,வினுடைய உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு முழுக்க நடைபெற்றிருக்கிறது. 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தோற்றுப் போகும் அளவிற்கு தமிழகத்தில் கல்வித்தரம் இருக்கிறது. தமிழை அந்தளவிற்கு அழித்திருக்கின்றார்கள்.
ஊழல் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது. தமிழக முதல்வர் இருக்கின்ற மேடையிலேயே, பிரிவினைவாதம் பேசக்கூடிய அளவுக்கு முன்வந்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் இருந்த மேடையிலேயே தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும்போது, `அண்ணா வழியை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். பெரியார் வழியை பின்பற்றும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்’ எனப் பேசியிருக்கிறார். அவர் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. தி.மு.க.,வினுடைய கொள்கை பரப்புச் செயலாளர். 1960-களில் பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டம் வந்த போது, ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்கின்ற முழக்கத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு வந்தவர் அண்ணா. 60 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை கோடிட்டுக் காட்டி, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பேசுகிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
ஆ.ராசா பேச்சினுடைய கருத்து திமுக-வினுடைய கருத்தா, திமுக ஆட்சியினுடைய கருத்தா அல்லது தமிழக முதல்வருடைய கருத்தா என தமிழக முதல்வர் விளக்கம் சொல்லியாக வேண்டும். இல்லையெனில், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடியெடுத்து வைக்கின்றார் என்றுதான் பொருள். அப்படி ஒருவேளை தமிழகத்தை பிரிப்போம் என்று சொல்லி அவர்கள் வந்தார்களேயானால், எந்த காரணத்தைக் கொண்டும் அதை அனுமதிக்க மாட்டோம்.
இந்த பிரிவினைவாதத்திற்காகவா மக்கள் திமுக-விற்கு வாக்களித்தார்கள். ‘பழைய திராவிட நாட்டை நோக்கித் தான் எங்களுடைய பயணம்’ என தி.மு.க., சொன்னால் மக்களிடமிருந்து ஒரு ஓட்டு கூடப் பெற முடியாது. ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்கின்ற இதை சாதாரண வார்த்தையாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள். ஏறக்குறைய மாற்றிவிட்டார்கள். இது ஒன்றும் தி.மு.க.,வினுடைய தனிப்பட்ட விஷயம் கிடையாது. 8 கோடி தமிழர்களுடைய விருப்பத்தை பொறுத்த விஷயம் இது. தனியா பிரிஞ்சி போயிடுவோம்னா, நீங்க தனியா போங்க. ஒரு திமுக.,காரன் கூட உங்க கூட வர மாட்டான். உங்களுக்கென தனியொரு ராஜியத்தை கடலுக்கு அப்பால் போய் அமைச்சிக்குங்க. இது தமிழர்களுடைய பூமி. இந்தியாவின் அசைக்க முடியாத பூமி. அசைக்க நினைத்தால், அசிங்கப்பட்டு அழிந்து போவீர்கள் ” என்றார்.