சென்னை: ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும் முடிவு எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான நீதிபதிகள் உத்தரவில், ‘கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் வழி காட்ட முடியாது. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது ஏன். ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம்.ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வழக்கில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பு முறையிடலாம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதிக்கிறோம். பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசிக்கொள்ளுங்கள். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும்,’ என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.