பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. குடகு, உடுப்பி உட்பட 3 மாவட்டங்கள் முழுவதுமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிக்கமங்களூரு, சிமோகா, ஹாட்சன் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை அதிகமாக உள்ள தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில், பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்த காரணத்தினால் அங்குள்ள பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் கலந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, குடகு- மங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 6 கி.மீ. தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதீத கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையானது, அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மீட்புப்பணியில் அனைத்து அரசு அலுவர்களும் துரிதமாக செயல்பட வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மங்களூரு, குடகு மாவட்டங்களில் பெருமளவு மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால், அவர்களை மீட்க அதிகப்படியான மீட்புப்பணியினர் அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியானது தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.