இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, கனடாவின் டொரன்டோவில் ‘காளி’ ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆகா கான் (Aga Khan) அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
டொரன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம், கனடாவின் பல்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான மாணவர்களின் 18 படைப்புகளை இணைத்து, கடந்த 2 ஆம் தேதி ஆகா கான் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. இதில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை, கவிஞரும், ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார்.
இந்த போஸ்டர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக எழுந்த புகாரில், அவர் மீது டெல்லி உள்ளிட்ட இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகா கான் அருங்காட்சியம் விடுத்துள்ள அறிக்கையில், இந்துக்கள் உள்ளிட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளது. டொரண்டோவில் உள்ள இந்திய துதரகம் கவலை தெரிவித்ததையடுத்து, ‘காளி’ ஆவணப்பட ஒளிபரப்பை அருங்காட்சியகம் நீக்குவதாக கூறியுள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக லீனா மணிமேகலை வெளியிட்ட ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது.