கொல்கத்தா: ‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு உலகளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி.யான மஹுவா மொய்த்ரா பேசுகையில், ‘என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான். தான் விரும்பும் வகையில் கடவுளை கற்பனை செய்து கொள்வது தனி நபர்களின் உரிமையை சார்ந்தது,’ என்று கூறினார். இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா நேற்று வெளியிட்ட பதிவில், ‘பொய் சொல்வதன் மூலம் சங்கிகள் சிறந்த இந்துக்களாக ஆக முடியாது. நான் எந்த திரைப்படத்தின் போஸ்டரையும் ஆதரிக்கவில்லை. எனது பேச்சில் புகைபிடிக்கும் வார்த்தையைக் குறிப்பிடவில்லை’ என்று தெரிவித்தார். இந்த கருத்து மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மஹுவா மொய்த்ரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவை எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை,’ என்று விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், எம்பி மஹுவா மொய்த்ரா மீது மத உணர்வுகளை சீர்குலைக்க முயன்றதாக 295ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மொய்த்ராவின் அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. எந்த ஒரு இந்து கடவுள் மற்றும் தெய்வங்களுக்கும் அவமரியாதை செய்வதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்,’ என்று தெரிவித்துள்ளார்.* காளி போஸ்டரை நீக்கியது டிவிட்டர்லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள காளி படத்தின் போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஆனால், ‘உயிரே போனாலும் இந்த பிரச்னையை எதிர்கொள்வேன்,’ என்று லீனா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்ப்புகள் அதிகமாகவே, சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நேற்று நீக்கியது. இது மட்டுமின்றி, கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம், காளி ஆவணப் படத்தை திரையிடுவதையும் நிறுத்தி உள்ளது.