புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜூலை 5) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவி ஏற்க வேண்டும்.
எனவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும். இதற்கு வேட்பாளர்கள் இன்று முதல் (ஜூலை 5) வேட்புமனு தாக்கல் செய்யலாம். வரும் 19-ம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாகும். வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் வரும் 20-ம் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களைத் திரும்பப்பெற ஜூலை 22-ம் தேதி கடைசி நாளாகும்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 788 உறுப்பினர்கள் வாக்களிப்பர். இவர்களின் வாக்கு மதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். ரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த தேர்தல் நடத்தப்படும். இதில் வாக்களிக்குமாறு எம்.பி.க்களுக்கு கட்சிகளின் கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
வேட்பாளரின் மனுவை, இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கும் 20 பேர் முன்மொழிய வேண்டும், 20 பேர் வழிமொழிய வேண்டும். இதற்கான டெபாசிட் தொகை ரூ.15,000.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் மட்டுமே நடைபெறும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.