மும்பை :’மும்பை கன மழைக்கு இடையே குதிரையில் சென்று உணவு, ‘டெலிவரி’ செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ என, ‘ஸ்விக்கி’ நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு, ‘டெலிவரி’ செய்யும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது.
இருசக்கர வாகனம்
அதில் பணியாற்றும் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களின் உதவியுடன் இந்த பணியை செய்கின்றனர்.மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் கன மழைக்கு இடையே முதுகில் உணவு டெலிவரி பையுடன் குதிரையில் விரையும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெறும், 6 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் அந்த ஊழியரின் முகம் தெரியவில்லை.
விருப்பம்
இந்த வீடியோ, ஸ்விக்கி நிறுவனத்துக்கு விளம்பரத்தையும், நற்பெயரையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, அடாத மழையிலும் விடாது பணியாற்றிய அந்த ஊழியரை பாராட்ட ஸ்விக்கி நிறுவனம் விரும்பியது.எனவே, ‘குதிரையில் சென்ற அந்த ஊழியர் குறித்து சமூக வலைதளம் வாயிலாக முதலில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ என, ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement