கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் விசேட கூட்டம் நேற்று (04) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கோப் குழு உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் தொடர்பில் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அதற்கமைய 2022 பெப்ரவரி 23 முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோப் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஓர் அறிக்கையாகத் தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையின் பிரதிகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோப் தலைவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மத்திய வங்கி, அரசாங்க மரக் கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை, வரையறுக்கப்பட்ட கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் லங்கா மற்றும் வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் டெர்மினல் லங்கா தனியார் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடர்பான தீர்மானம் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் தொடர்பில் குழு வழங்கிய சில தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் இதுவரை குழுவுக்கு வழங்கப்படவில்லை என வும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் கடுமையாகச் செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டுமென குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பாராளுமன்றமும் குழுவும் மேலும் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர். விஷேடமாக, இது ஊடக நிகழ்ச்சியோ அல்லது கதைப்பெட்டியோ என்ற நிலையிலிருந்து தாண்டிச் சென்று முக்கிய பணிகள் நடைபெறும் இடம் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, நிலையியற் கட்டளைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய வழங்கப்பட்டுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தின் பிரகாரம் குழு செயற்படுவதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதேபோன்று, இனங்காணப்பட்ட முக்கிய நிறுவனங்களை மீண்டும் அழைத்து விஷேட நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்றம் என்றவகையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய வங்கியின் அரச கடன் மற்றும் நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு விஷேடமாக கூடுவதற்கான தினம் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, இம்மாதம் 19, 20, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு விஷேடமாகக் கூடவுள்ளது. அதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர்களை அழைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கோப் குழு ஆகஸ்ட் மாதம் 02, 03, 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் விஷேடமாகக் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இம்மாதம் 07 ஆம் திகதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கோப் முன்னிலையில் அழைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே, கௌரவ இந்திக்க அனுருத்த, (கலாநிதி) கௌரவ ஹர்ஷ டி. சிலவா, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ எஸ்.எம். மரிக்கார். கௌரவ நளின் பண்டார, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.