ஜார்க்கண்ட் மாநிலத்தில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி 4 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளர்களான உத்தம் மெய்டி – அஞ்சனா மஹாடோ தம்பதி, தங்களின் 4 வயதான இரண்டாவது மகள் சரியாக படிக்கவில்லை என்பதால் கைகளை கட்டி அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி மயக்கமான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
உடனே சிறுமியின் உடலை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்று ரயில் தண்டவாளம் அருகே உள்ள புதரில் வீசிச் சென்றுள்ளனர் அந்த பெற்றோர். இந்த சம்பவம் ஜுன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு வீட்டுக்கு வந்த அவர்களிடம், அக்கம்பக்கத்தினர் சிறுமி குறித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெற்ற மகளை கொலை செய்த பெற்றோரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தாதல் அடித்தபோது மகள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுமியின் உடலை பெற்றோர் வீசிச் சென்ற புதரில் இருந்து மீட்டுள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM