நாட்றாம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சரியாக பணிக்கு வராத பெண் ஊழியர் உட்பட 3 பேரை ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பலர் சரியான நேரத்துக்கு பணிக்கு வராமலும், முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்து செல்வதால் பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.
மேலும், இது தொடர்பாக மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாட்றாம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென வந்தார்.
அப்போது, வரி தண்டலர் கம்சலா, குடிநீர் தொட்டி பராமரிப் பாளர் ஜெயபால், அலுவலக உதவியாளர் அனுமந்தன் ஆகியோர் காலை 11 மணி கடந்தும் பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அலுவலகத்தில் ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்து பணியில் இருந்த அரசு அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். காலை 11.30 மணி கடந்தும் பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணிக்கு வராமல் இருந்தனர்.
இதனால், கம்சலா உள்ளிட்ட 3 பேரையும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.
விடுப்பு எடுப்பதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதிப்பெற்று அதன் பிறகு விடுமுறையில் செல்ல வேண்டும். இந்த நடமுறைகளை பின்பற்றாத ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் எச்சரித்தார்.