புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி நடத்தலாம் என அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்றும், அதைத் தவிர்த்து புதிதாக தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது கட்சி விதிகளை திருத்தவோ கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஒற்றைத் தலைமை தொடர்பாக முடிவு எடுக்கும் வகையில் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்மகன் உசேன் நியமனத்தை எதிர்த்தும், ஜூலை 11-ல் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும் சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்துள்ளனர்.
இதனிடையே, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என தடை விதித்து நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான நத்தம் விஸ்வநாதன், பி.பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, சி.எஸ்.வைத்யநாதன் மற்றும் காணொலி வாயிலாக விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுதாரர்கள் எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. கட்சியின் உள்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட எந்த அதிகாரமும் இல்லை’’ என வாதிட்டனர்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனீந்தர் சிங் மற்றும் காணொலி வாயிலாக குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. அவர்களுக்கான பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்கும் போது எப்படி நீக்க முடியும்? தற்போது அதை உடைத்தெறிந்து ஒற்றைத் தலைமை என்ற போர்வையில் கட்சியை கைப்பற்ற பழனிசாமி நினைக்கிறார். கட்சியின் அடிப்படை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்ததில் எந்த விதிமீறலும் இல்லை. அதனால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளோம். ஜூலை 11-ல் நடக்கவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கும் தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.
அதையேற்க மறுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. கட்சி விவகாரம் தொடர்பாக பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், எதை நிறைவேற்றக் கூடாது என்பதை நீதிமன்றம் தலையிட்டு முடிவு செய்ய முடியாது. கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்படும் நட்பையோ அல்லது பிணக்கையோ அவர்களேதான் முடிவு செய்து கொள்ள வேண்டும். 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் நீதிமன்ற அவமதிப்பு இருப்பதாக தெரியவில்லை.
அதேபோல, ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கும் நாங்கள் தடை விதிக்க முடியாது. அந்தக் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், பொதுக்குழுவில் புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் எந்தத் தடையும் இல்லை.
அதேநேரத்தில், இந்த பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ள இந்த வழக்கு தடையாக இருக்காது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் இருவார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை
ஜூலை 11-ல் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, ஜூலை 11-ல் நடக்கவுள்ள பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதியை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் என்ன நிவாரணம் கோரியுள்ளீர்கள்’’ என்றார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ‘‘பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாளை (இன்று) தாக்கல் செய்கிறோம். எனவே, விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘‘இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது’’ என்றார். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் பதிலளிக்க தங்களுக்கு அவகாசம் தேவை என்றார்.
அதையடுத்து நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி விசாரணையை இன்று (ஜூலை 7) பிற்பகலுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.