'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை!

தமிழக பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு துறையில் விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர், நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்பி நாராயணன், சட்ட ரீதியில் போராடி, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம் தான், ராக்கெட்ரி! மாதவன் நடித்து, இயக்கியுள்ளார்.

அந்த படம் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி உண்டு. பேட்டி எடுப்பவர், உள்ளூர் மொழியில் பிரபலமான நடிகராக இருப்பவர். பேட்டி முடிந்ததும், நம்பி நாராயணன், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி முடிப்பார். ஹிந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக் கானும் பதிலுக்கு, 'ஜெய் ஹிந்த்' என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி பேட்டியை முடிக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை. சூர்யாவுக்கு, 'ஜெய் ஹிந்த்' பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித் தான் எடுக்கப்பட்டுள்ளதா?

சூர்யா, ஜெய் ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையை கூற மாட்டார் என்றால், அது என்ன கொச்சை வார்த்தையா? ஒரு வேளை, அவருக்கு ஹிந்தி தெரியாததால், அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ ஹிந்தி மொழியை இலவசமாக கற்று கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். அப்படியில்லாமல், அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப் பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம். அதற்கு என்ன தேவையோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.