ஜோர்ஜியாவின் திபிலிசிக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் 2022 ஜூன் 20ஆந் திகதி திபிலிசியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவுடன் ஜோர்ஜியாவிற்கான அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், ஜோர்ஜியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜோர்ஜியாவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், வர்த்தக மன்றங்கள், பயண மற்றும் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜோர்ஜியாவில் வசிக்கும் மற்றும் கல்வி கற்கும் இலங்கையர்களின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, நியமன ஆணையை திபிலிசியின் கௌரவ தூதுவர் நினோ மக்விலாட்ஸேவிடம் தூதுவர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இதன்போது உரையாற்றிய தூதுவர், ஜோர்ஜியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 30 வருட இராஜதந்திர உறவுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தார். பொருளாதாரம், கலாசாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்க இலங்கை விரும்புவதாக தூதுவர் ஹாசன் அறிவித்தார். ஏற்றுமதி பொருட்களை பன்முகப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் திறன்களை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஜோர்ஜியாவின் வர்த்தக சமூகத்தை இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைக்கும் நோக்கில் கௌரவ துணைத் தூதரக அலுவலகம் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோர்ஜியாவின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பணிப்பாளர் நாயகம் அலெக்சாண்டர் நல்பந்தோவ் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றியதுடன், ஜோர்ஜியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பிணைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தும் என சுட்டிக்காட்டினர். ஜோர்ஜியா அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திபிலிசியின் கௌரவ தூதுவர் நினோ மக்விலாட்ஸே தனது உரையின் போது, இலங்கைக்கு புதிய வர்த்தக வாய்ப்புக்கள் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஜோர்ஜியாவில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதி செய்தார். ஜோர்ஜியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திபிலிசியில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் பக்க அம்சமாக, ஜோர்ஜியா பாராளுமன்றத்தில் உள்ள ஜோர்ஜியா – இலங்கை நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லெவன் கருமிட்ஸையும் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான பிராந்தியத்தின் அண்மைய அபிவிருத்திகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான எதிர்கால பரிமாற்றங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளையும் தூதுவர் சந்தித்தார். தூதுவருடன் கௌரவ தூதுவர் மக்விலாட்ஸேவும் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இலங்கைத் தூதரகம்,
அங்காரா
2022 ஜூலை 04