ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான் தேயிலை சங்கத்தால் 2022 ஜூன் 25ஆந் திகதி தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலோன் தேயிலை பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
ஜப்பானிய நுகர்வோர் மத்தியில் சிலோன் தேயிலையை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 35 க்கும் மேற்பட்ட ஜப்பானிய தேயிலைப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.
தூதரகத்தின் பொறுப்பதிகாரி சேசத் தம்புகல தனது உரையில் சிலோன் தேயிலையின் தனித்தன்மைகள், பிராந்திய வகைகள் மற்றும் தேயிலைப் பாவனையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து கூட்டத்திற்கு விளக்கினார். பொருளாதார மறுமலர்ச்சிக்காக நாடு அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்காகப் பாடுபட்டு வருகின்ற இத்தருணத்தில் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு பங்கேற்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கவும் அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
நிகழ்வில் சிலோன் தேயிலை பற்றிய காணொளிக் காட்சி, ஜப்பான் தேயிலை சங்கத்தின் சான்றளிக்கப்பட்ட தேயிலைப் பயிற்றுவிப்பாளரால் தேநீர் காய்ச்சும் செயல்விளக்கம் மற்றும் சிலோன் தேயிலை மற்றும் தேயிலை உட்செலுத்தப்பட்ட பானங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த விரிவுரை ஆகியன இடம்பெற்றன.
டில்மா தேயிலையை ஜப்பானுக்கு இறக்குமதி செய்யும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளரான வோல்ட்ஸ் கோ. லிமிடட், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிலோன் தேயிலை வகைகளின் பரிசுப் பொதிகளுக்கு அனுசரணை வழங்கியதுடன், ‘ருஹூன’ தேயிலை வகை மற்றும் அதன் பல்துறை பற்றிய விளக்கத்தையும் வழங்கியது.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2022 ஜூலை 04