தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு என்ற பாட்டு உண்டு. பெற்ற பிள்ளை கைவிட்டாலும் வளர்த்த தென்னை மரம் கைவிடாது என்பதுதான் அந்தப் பாட்டின் உள்ளர்த்தம். ஆனால், இதற்கு மாறாக தென்னை விவசாயம் விவசாயிகளை பாதித்து வருகிறது. ஒரு தென்னை மரத்தை நட்டு வளர்க்க குறைந்தது 5 வருடங்களாவது ஆகும். அதைக் கண்காணித்து வளர்ப்பதற்கு பெரும் உழைப்பு செலவிட வேண்டியுள்ளது.
இந்தாண்டு தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விவசாயத்தையே கைவிடும் அளவிற்கு பல இடங்களில் விவசாயிகள் நொந்துள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கீழதிருப்பந்துருந்தி பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம் (வயது 57). தேங்காய் விலை வீழ்ச்சியால் பெரிதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளில் இவரும் ஒருவர். இவருக்கு கண்டியூரில் சுமார் 2 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதில் உள்ள 143 தென்னை மரங்களை வெட்டி அழித்து விட்டு மாற்று பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதி விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராமலிங்கம் கூறியதாவது, “விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் தேங்காயை குறைந்த விலைக்கு வாங்கி சென்று, வெளி சந்தையில் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்றாங்க. இந்நிலையில், ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது 40 ரூபாயும், வெட்டிய தேங்காயை அள்ள அரை நாள் சம்பளம் 300 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்குது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுது.
கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை பெரும் வீழ்ச்சியடைஞ்சிருக்கு. இனி இதனால் பலன் இல்லை என முடிவு செய்து மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். எல்லா மரங்களும் நன்றாக காய்க்க கூடிய மரங்கள்தான். யாருக்கும் வளர்த்த மரங்களை வெட்டி வீழ்த்துறதுக்கு மனசு வராது. ஆனா, வேறு வழியில்ல. விலையில்லாமல் எத்தனை நாளுக்குத்தான் தென்னையை பராமரிக்கிறது. ஆசையா வளர்த்த தென்னை மரங்களை வெட்டி மரக்கடைக்கு அனுப்புறது வேதனையாகத்தான் இருக்கு” என்றார் சோகமா.
தென்னை விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.