தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.