தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளதால் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கவில்லை. அதனால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அலுவலகத்திலிருந்த தபால் பெட்டியில் விண்ணப்பதாரர்கள் போட்டுச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை தற் காலிக ஆசிரியர் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதற்கு ஜூலை 4, 5, 6 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்பங்கள் வாங்கவில்லை. மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், 4 கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கவில்லை.
இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்றும் நூற்றுக்கணக்கானோர் முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் இடைக்காலத் தடையால் விண்ணப்பங்களை தற்போது வாங்க இயலாது எனவும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தனர். ஆனால் வந்திருந்த விண்ணப்பதாரர்கள், கல்வித்துறை அலுவலர்களின் ஆலோசனையை கேட்கவில்லை. பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அலுவலகத்தின் முகப்பில் வைத்திருந்த தபால் பெட்டியில் இட்டுச் சென்றனர்.
அதனைப் பார்த்த மேலும் சிலரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் பெட்டியில் இட்டுச் சென்றனர். வேலைவாய்ப்பை பெற வேண்டும் எனும் வேட்கையில் இன்னும் சிலர் விண்ணப்பங்களை தபாலில் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.