மதுரை: தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலிருந்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம் மனு ஒன்றினை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து இருந்தார். அதில் “சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகமது அப்துல்லாவுக்கு தனியார் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் முகமது அப்துல்லாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ஆண்டு தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சகிலால்பானு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் சேர்த்துள்ளார். மருத்துவர்கள் கவனக்குறைவு தொடர்பாக புகார் வந்ததும் விசாரணை நடத்தப்பட்டு அதிகாரத்துக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒரு ஆண்டு தொழில் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகும் இழப்பீடு வழக்கில் மருத்துவ கவுன்சிலை சேர்த்தது சட்டவிரோதம். எனவே, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சில் சேர்த்ததை நீக்கி உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் சதீஷ்பாபு வாதிடுகையில், ”தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி புகார் வந்ததும் முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதற்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறினார்.
வாதத்தை கேட்ட நீதிபதி, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டு வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை சேர்க்க முகாந்திரம் இல்லை என்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை எதிர்மனுதாரராக சேர்க்க முடியாது எனவும் கூறிய நீதிபதி, நெல்லை நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கிலிருந்து மருத்துவ கவுன்சில் நீக்கியதுடன், வழக்கை நுகர்வோர் நீதிமன்றம் விரைவில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார்.