திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 4-ம் தேதி பக்தர்கள் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
உலகின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருவாய் குறைந்தது.
தற்போது வழக்கம்போல பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்த திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைமுடி காணிக்கை செலுத்துபவர்கள், துலாபாரம் செலுத்துபவர்கள், அங்கப்பிரதட்சணம் செய்ய வருபவர்கள், மலைக்கு நடந்து வருபவர்கள், திருக்கல்யாண உற்சவம் செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள் என ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட திருமலைக்கு வருகின்றனர்.
இதனால், சனி, ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் காணப்படும் கூட்டம், சாதாரண நாட்களிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக சர்வ தரிசனம் முறையில் சுவாமியை வழிபட சுமார் 18 மணி நேரம்கூட ஆகிறது.
பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், உண்டியல் காணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே போகிறது. ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு சராசரியாக நாளொன்றுக்கு ரூ.3 கோடி வரை உண்டியல் காணிக்கை வசூலானது. இது இந்த ஆண்டு ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அதிகபட்சமாக ரூ. 5.73 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். இதுவே, இதுவரை அதிகபட்சமான ஒரு நாள் உண்டியல் வருவாயாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.6.19 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இதுதான் தற்போது தேவஸ்தான உண்டியல் காணிக்கையில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஒரு பக்தர் ஒரே கட்டாக ரூ.1.64 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தார். இவர் ஒவ்வோர் ஆண்டும் இதுபோல் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தி வருகிறார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த 4-ம் தேதி சுவாமியை 77,907 பக்தர்கள் வழிபட்டனர். இதில் 38,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். நேற்று காலை தர்ம தரிசனத்துக்கு சென்றவர்கள், 12 மணி நேரம் கழித்து சுவாமியை வழிபட்டுவிட்டு வெளியே வந்ததாகத் தெரிவித்தனர்.