ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்களைவிடப் பழைமையான திருத்தலமான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் 22 அடி நீளத்திற்கு அனந்த சயனத்தில் மேற்கு நோக்கி பெருமாள் காட்சி தருகிறார்.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலைகள், பூஜைகள் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு யாகசாலைகள், உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை போன்றவை நடைபெற்றன. காலை 6.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆதிகேசவ பெருமாள் கருவறையின் மீது அமைந்துள்ள ஐந்து கும்பங்களுக்கும் தனித்தனியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வேத பண்டிதர்கள் மந்திரம் ஓதி கும்பத்தில் இருந்து புனித நீரை ஊற்றினர். கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு ஆதிகேசவருக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். ஆனால் அதிகாலை 3 மணிக்கு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சென்ற ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலுக்கு வெளியே நின்ற பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வைக் காண்பதற்காக அகன்ற டிஜிட்டல் திரையில் நேரலை ஒளிபரப்பப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆதிகேசவப் பெருமாளுக்கு நடைபெற்ற அலங்கார தீபாராதனையிலும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. திருவட்டாறு கோயிலுக்குச் செல்ல மாவட்டம் முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
418 ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த கும்பாபிஷேகம் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது கேரள மாநில பக்தர்களும் அதிக அளவில் திருவட்டாறு கோயிலுக்கு வந்திருந்தனர். வரும் 9-ம் தேதி வரை ஆதிகேசவருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.