“அடேயப்பா… 25 வருசத்துக்கப்புறம் மீண்டும் சினிமாவுல நடிக்கிறாரு” என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ‘பன்னிகுட்டி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் பட்டிமன்ற நடுவரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி. வரும் ஜூலை 8-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் லியோனியை தொடர்புகொண்டோம். அதே கிண்டல் கேலியுடன் ஜாலியாகப் பேசினார்.
சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி, எப்படி இருக்கிறது?
“‘கங்கா கெளரி’ படத்திற்குப்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சூழலால் பல படங்களைத் தவறவிட்டுவிட்டேன். இடையில் ‘காதலர் தினம்’ படத்தில் நடிக்க சம்மதித்து பட்டிமன்ற நடுவராகவே 11 நாள்கள் நடித்தேன். சின்னி ஜெயந்த்தும் ஹீரோ குணாலும் ‘கல்லூரி காதல் சுகமானதா? சுமையானதா?’ என்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள். ‘சுகமானது’ என்று பேசும் குணாலைப் பார்த்து ஹீரோயின் இன்ஸ்பயர் ஆகி லவ் பண்ற மாதிரி சீன்ஸ் எடுத்தாங்க. நானும் ரொம்ப ஆசையா நடிச்சுக்கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆனப்போ ரொம்ப ஆசையாப்போய் பார்த்தேன். ஆனா, நான் நடிச்சக் காட்சி ஒண்ணுக்கூட வரலை. என்னைக் கேக்காமலேயே கட் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம், சினிமான்னா இப்படித்தான் இருக்கும்போலன்னு நினைச்சி, நிறையப் படங்களை தயக்கத்தோட தவிர்த்துட்டேன்.
‘சிவாஜி’ படத்தில் ரஜினி சாருக்கு மாமனாரா நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்துச்சி. அப்போ, ஸ்கூல்ல பிஸியா இருந்ததால அந்த வாய்ப்பைத் தவறவிட்டுட்டேன். இப்படி, சினிமாங்குற நல்ல மீடியாவை ஏன் மிஸ் பண்ணோம்ன்னு நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் ‘பன்னிக்குட்டி’ படத்தின் வாய்ப்பு வந்தது. இயக்குநர் அனுசரணின் ‘கிருமி’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அவர் கேட்டவுடனே ஓகே சொல்லிட்டேன். என் திறமையை முழுசா வெளியே கொண்டு வருவார் என்று நம்பிக்கை இருந்தது. அப்படியே கொண்டுவந்துள்ளார். படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் வருகிறேன். அடுத்ததாக, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘ஆலம்பனா’ படத்தில் வைபவுக்கு தாத்தாவாக படம் முழுக்க வருகிறேன். நல்ல வாய்ப்புகள், நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன்.”
தி.மு.க மூடநம்பிக்கைகளை எதிர்த்துகொண்டிருக்கும்போது சாமியாராக நடித்துள்ளீர்களே?
“சாமியார் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தவறில்லை. அதன்மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்பதுதான் முக்கியம். விவேகானந்தரும் சாமியார்தான். நித்யானந்தாவும் சாமியார்தான். இதில், விவேகானந்தரை வழிகாட்டியாக உலகம் முழுக்கக் கொண்டாடுகிறார்கள். நான் சாமியாராக வந்தாலும் மக்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கக்கூடிய நல்ல சாமியாராக வருகிறேன்.”
விமர்சனம் எழுதினாலே இயக்குநர் ஆகிவிடும் காலமிது. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பட்டிமன்றத்தின் மூலம் படங்களை விமர்சனம் செய்தவர் நீங்கள். சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
“அந்த மாதிரி எந்த ஏக்கமும் ஆசையும் எனக்கு இல்லை. நல்ல வாய்ப்பை மிஸ் செய்யக்கூடாது என்ற முறையில்தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தேன்.”
உங்கள் உறவினரான இயக்குநர் சி.எஸ் அமுதன் ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ எடுக்கும்போது சினிமாக்களை கிண்டல் அடிப்பது தொடர்பாக உங்களிடம் விவாதித்திருக்கிறாரா? நீங்கள் ஏன் அவரது படங்களில் நடிக்கவில்லை?
“அமுதன் வித்தியாசமாகச் சிந்திப்பவர். அதனால், இரண்டுப் படங்களும் அப்படி வந்தன. நிறைய டிஸ்கஸ் பண்ணுவார். ஆனால், படத்தோட கதை தொடர்பாக விவாதம் செய்ததில்லை. அவர், படத்தில் நடித்தால் ‘மருமகன் படத்துல மாமா நடிக்கிறார்’ என்ற பேர் வந்து குடும்பப் படமாகிடும். அதனால்தான், நடிக்கவில்லை. அவரும் அதை விரும்பவில்லை.”
பொதுவாகவே, பட்டிமன்றத்தில் விவாதிப்பவரை பாடநூல் கழகத்தலைவர் ஆக்கிவிட்டார்கள் என்ற விமர்சனம் உங்கள்மீது வைக்கப்படுகிறதே?
“முதலில் நான் ஒரு ஆசிரியர். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே பட்டிமன்ற நடுவராக உலகம் முழுக்க தமிழ்ச் சங்கங்களில் பேசியுள்ளேன். 33 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். பட்டிமன்ற நடுவராக இருந்ததற்காக இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுக்கவில்லை.”
புதுக்கோட்டை மாணவி மகாராஷ்டிர மாநில பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாரே? தமிழ்நாட்டு பாடபுத்தகத்தில் கொண்டு வந்திருக்கலாமே?
“அந்தப் பெண்ணின் மிகப்பெரிய சாதனைக்கு போன் செய்து வாழ்த்தினேன். இனிவரும் காலங்களில் சாதனைப் படைத்த மாணவர்களைப் பாடப்புத்தகத்தில் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நாங்கள் பாடப்புத்தகத்தை பிரின்ட் அடித்துக்கொடுத்தப் பின்னரே நடந்த சம்பவங்கள் இவை. இனிமேல் நிச்சயம் இடம்பெறுவார்கள். கல்வி அமைச்சரிடம் சொன்னபோது, அடுத்த ஆண்டு முதல் முதல்வரின் அனுமதி பெற்று வைத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.”